ஜனவரி 11, 1915
இதற்குமுன் எப்போதும் இருந்ததை விடவும் அதிக தீவிரமாக மனோமய ஜீவனின் ஆர்வம் என்னை நோக்கி எழுந்தது.
ஆனந்தத்தையும் நித்தியத்தை யும் உணரும் உணர்வு எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. சமய சார்புடைய மகிழ்ச்சி, ஆன்மீக பரவசம் இவற்றிடமிருந்தெல்லாம் கத்தரித்து முற்றிலும் சடத்தன்மை கொண்ட சூழ்நிலைகளுள் என்னை மூழ்கடிக்க வேண்டுமென்று நீ நிச்சயித்திருப்பதாகத் தோன்றுகிறது. எம்மனே, எல்லா இடங்களிலும் நினது பூரணமான ஆனந்தமே உள்ளது, நீ எனக்கு அருளியுள்ள அற்புத வரத்தை எதனாலும் என்னிடம் இருந்து பிடுங்க முடியாது; எந்த இடத்திலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அது என்னிடம் இருக்கிறது, நான் நீயாக இருப்பது போலவே அதுவும் நானாக இருக்கிறது. ஆனாலும் இருக்க வேண்டிய நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இதெல்லாம் ஒன்றுமே இல்லை. இந்த மந்தமான இருளடைந்த சடலத்திலிருந்து நினது அன்பு, ஒளி ஆகிய எரிமலையை நான் வெடிக்கச் செய்ய வேண்டுமென்று நீ விரும்புகின்றாய்; பழைய மொழி மரபுகளையெல்லாம் உடைத்தெறிந்து விட்டு நின்னை விளக்கிடும் படியான ஒரு வாக்கு இதுவரை கேட்கப்படாத வாக்கு, இதுவரை கேட்கப்படாத வாக்கு பிறக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாய், கீழேயுள்ள மிக அற்புதமான விஷயங்களுக்கும் மேலேயுள்ள மிகப்பரந்த மிக உன்னதமான விஷயங்களுக்கும் இடையே உள்ள ஐக்கியம் முழுமை அடைய வேண்டாம் என்று விரும்புகிறாய்; அதனால்தான், பிரபு, என்னை சமையச் சார்பான எல்லா மகிழ்ச்சிகளிலிருந்தும், எல்லா ஆன்மீகப் பரவசத்தினின்றும் கத்தரித்து, நின் மீது மட்டுமே ஒருமுறை பட்டிருக்கும் என் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டு, என்னிடம் இவ்வாறு கூறுகின்றாய். “சாதாரண மனிதர்கள் மத்தியில் ஒரு சாதாரண மனிதனைப் போல் வேலை செய்“; வெளிப்படும் எல்லாவற்றிலும் அவர்களைப்போலவே இருக்கக் கற்றுக்கொள்; அவர்களுடைய எல்லா வாழ்க்கை முறைகளிலும் கலந்துகொள்; ஏனென்றால், அவர்கள் அறிந்துல்லவற்றிற்கெல்லாம் மேலாக அவர்களுடைய இப்போதைய ஆன்ம நிலைக்கு மேலாக, ஆடாது எரிகின்ற நித்திய ஜோதியின் தீப்பந்தத்தை நீ உன்னுள்ளே ஏந்திக் கொண்டிருக்கிறாய்; ஆகவே அவர்களுடன் தொடர்பு கொள்ளும் போது நீ இந்த ஜோதியை அவர்கள் மத்தியில் எடுத்துச் செல்வாய். இந்த ஒளி உன்னிடமிருந்து பரவிக் கொண்டிருக்கும் வரை நீ ஒளியை அனுபவிக்க வேண்டிய அவசியமா என்ன? எனது அன்பை எல்லாருக்கும் கொடுத்துக்கொண்டிருக்கும்வரை என்னுடைய அன்பு உன்னுள் அதிர்ந்து கொண்டு இருப்பதை நீ உணர வேண்டிய தேவையா என்ன? எனது சாந்நித்தியத்தின் ஆனந்தம் எல்லோருக்கும் கிடைப்பதற்கு நீ ஒரு இடை கருவியாக இருக்கும் வரை, நீ அந்த ஆனந்தத்தை முழுவதும் அனுபவிக்க வேண்டுமா என்ன?
இறைவா,நின் சித்தம் நிறைவேறட்டும்— முழுமையாக நிறைவேறட்டும்.
அதுவே எனது இன்பம், அதுவே எனது தர்மம்.
ஸ்ரீ அன்னையின் பிரார்த்தனைகளும் தியானங்களும்