அச்சம் ஏற்படும்போது
ஒருவன் என்ன செய்ய வேண்டும் ?
பகுதி : ஒன்று
————
அச்சம் உணர்வின்மையால் தோன்றுவது .
அது அஞ்ஞானத்திலிருந்து உண்டாகும்
ஒருவகையான பெருவேதனை .
ஒரு விஷயத்தின் தன்மை
நமக்குத் தெரியவில்லை ,
அதன் விளைவு என்னதாக இருக்குமென்றோ ,
என்ன நடக்கும் என்றோ தெரியவில்லை ,
நமது செயல்களின் பின் விளைவுகளைப் பற்றி ஒன்றும் தோன்றவில்லை ,
இப்படி எத்தனையோ விஷயங்கள்
நமக்குத் தெரியவில்லை ;
இந்த அறியாமை
அச்சத்தை உண்டாக்குகிறது .
நமக்கு ஒன்றைப்பற்றித் தெரியாதபோது
அதனிடம் அச்சம் உண்டாகிறது .
ஒரு குழந்தையை எடுத்துக் கொள்வோம் ,
அதற்குத் தெரியாத ஒரு மனிதரிடம்
அதைக் கொண்டு வந்தால்
( விழிப்படைந்த உள் உணர்வுடைய குழந்தையைப்பற்றி நான் சொல்லவில்லை ,
ஒரு சாதாரண குழந்தையைப்பற்றிச் சொல்லுகிறேன் )
அதன் முதல் இயக்கம் எப்பொழுதும்
அச்சத்தோடு கூடியதாகத்தான் இருக்கும் .
மிக அரிதான குழந்தைகள் தாம்
– அவர்களுக்கு வேறு ஓர் உணர்வு உள்ளது –
சிறிதும் அச்சமில்லாதவர்களாக இருப்பார்கள் .
அது ஒருவகையான இயல்பூக்கம் .
நீ இயல்பூக்கத்தினால்
ஒன்று ஆபத்தானது என்று உணர்கிறாய் ,
அதை நீக்க வழியில்லை ,
அதிலிருந்து உன்னைப் பாதுகாத்துக்கொள்ள
என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை ,
அப்பொழுது உனக்கு அச்சமுண்டாகிறது .
அச்சத்திற்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன் .
ஆனால் எப்பொழுதும்
அது உணர்வின்மையின் இயக்கமே .
அறியும்போது அச்சம் இராது .
பூரணமாக விழித்திருக்கும் ஒன்றிற்கு ,
முழு உணர்வுடனும் அறிந்தும் இருக்கும் ஒன்றிற்கு , அச்சம் இராது .
எப்பொழுதும் இருளான ஒன்றுதான் அஞ்சும் .
அச்சத்தை வெல்வதற்குரிய சிறந்த மருந்துகளுள் ஒன்று , எதை அஞ்சுகிறோமோ
அதைத் துணிச்சலுடன் எதிர்கொள்வதுதான் .
நீ அஞ்சும் ஓர் ஆபத்தை
நீ நேருக்கு நேர் சந்திக்கும்போது
நீ இனியும் அதற்கு அஞ்சுவதில்லை .
அச்சம் போய்விடுகிறது .
யோக நோக்கிலிருந்து ,
சுய கட்டுப்பாட்டு நோக்கிலிருந்து ,
இந்த சிகிச்சைதான் சிபாரிசு செய்யப்படுகிறது .
பண்டைக் காலத்து தீட்சை முறைகளில் ,
குறிப்பாக எகிப்தில் ,
மறை ஞானவித்தை ( occultism ) பயில வேண்டுமானால் மரண பயத்தை முற்றிலுமாக நீக்கிவிட வேண்டுவது அவசியம் .
அந்த அச்சத்தைப் போக்க கையாண்ட முறைகளுள் இது ஒன்று : மாணவனை ஒரு கல் சவப் பெட்டியில் கிடத்தி , சில நாட்களுக்கு அவனை இறந்தவனைப் போல அங்கே விட்டு விடுவார்கள் . அவன் பசியினாலோ , மூச்சுமுட்டியோ இறந்துபோக விடமாட்டார்கள் என்று சொல்லத் தேவையில்லை , இருந்த போதிலும் அவன் இறந்தவனைப்போல் அதில் படுத்திருப்பான் .
அது ஒருவனிடமிருந்து எல்லா அச்சத்தையும் நீக்கிவிடுவதாகத் தெரிகிறது .
அச்சம் தோன்றும்போது அதன்மீது
உணர்வை ,
ஞானத்தை ,
சக்தியை ,
ஒளியைச் செலுத்துவதில் நீ வெற்றி கண்டால்
நீ அதைப் பூரணமாகக் குணப்படுத்திவிடலாம் .
– ஸ்ரீ அன்னை