இறைவனை மறப்பதேன்?
கேள்வி: நாம் மனத்தின் இயக்கங்களிலோ, பகுத்தறி வின் சிந்தனைகளிலோ ஆழ்ந்திருக்கும்போது, சில சமயம் இறைவனை மறந்துவிடுகிறோம், தொடர்பை இழந்துவிடுகிறோம்; ஏன்?
அன்னை: உன் உணர்வு இன்னும் பிரிவுபட்ட நிலையில் இருப்பதால் நீ அந்தத் தொடர்பை இழந்து விடுகிறாய். இறைவன் இன்னும் உன் மனத்தினுள் ஆழப் பதியவில்லை; தெய்விக வாழ்வுக்கு உன்னை நீ இன்னும் முழுமையாக அர்ப்பணிக்கவில்லை. இல்லா விட்டால், நீ எவ்வளவுதான் சிந்தனையில் ஈடுபட்டி ருந்தாலும், உன்னை இறைவன் ஆதரித்து உதவுகிறான் என்னும் உணர்வு எப்போதும் இருக்கும்.
உன் எல்லா முயற்சிகளிலும் – அவை பகுத்தறிவு சம்பந்தப்பட்டவையோ அல்லது செயலாற்றும் முயற்சி களோ – நீ பின்பற்ற வேண்டிய இலட்சியமாவது: “நினைவுகூர்ந்து அர்ப்பணி.” நீ செய்வதையெல்லாம் இறைவனுக்கு அளிக்கும் காணிக்கையாகச் செய். இது உனக்கு மிகச் சிறந்த ஒழுக்க முறையாகவும் இருக்கும், பல முட்டாள்தனமான வீண்செயல்களைச் செய்வதிலிருந்து இது உன்னைத் தடுக்கும்.
-அன்னையுடன் உரையாடல் 1929-1931