*தியானத்திற்கு ஏற்ற குறிக்கோள்*
இவ்வுலகிலுள்ள அனைத்துடனும் ஓர் ஐக்கிய பாவம் ஏற்படுவதுதான் ஆத்மானுபவத்தின் முதல் படியாகும். பிறரைப் புரிந்து கொள்வது, பிறருக்கு இறங்குவது, சுற்றியுள்ளோர்பால் அன்பு கனிவது, அவர்களுக்காக பணியாற்ற விரும்புவது இவையெல்லாம் ஆத்மா அனுபவத்தின் ஆரம்ப விளைவுகளாகும்.
இவ்வாறு அனுபவமாகும் ஐக்கியத் தன்மை பலவாய் உள்ளவற்றை ஒருங்கிணைக்கும் ஐக்கியமேயாகும்; ஒரே தன்மை வாய்ந்த அநேக விஷயங்களை ஒட்டுமொத்தமான தொகையாகச் செய்வதுதான் இந்த ஐக்கியம். இது முடிவான ஒன்றிப்பு ஆகாது.
பிரதானமான ஒன்றாய் இருக்கும் தன்மையைக் காணுவதிலிருந்து தான் உண்மை ஞானம் பிறக்கிறது. அதாவது, ஓர் அன்னமயம், ஒரு பிராணமயம், ஒரு மனோமயம், ஒர் ஆன்மா– இவையே பல வடிவங்களில் உலவுவதைக் காண்பதே உண்மை ஞானத்தின் அறிகுறி.
இந்த அனைத்தின் ஆன்மாவும் சச்சிதானந்தமாய் இருப்பதைக் காண்பதுதான் ஞானம் பரிபூரணமாவதைக் குறிக்கிறது. அந்த நிலையடைந்ததும் அன்னமயமாகிய சட வஸ்து பிராணனின் ஒரு வெளிப்பாடே என்பதை நாம் அறிவோம்; பிராணன் என்பது மனதின் சத்துள்ள ஒரு விளைவே என்றும் மனம் என்பது சத்தியத்தின் ஒரு வெளிப்பாடே என்றும் அறிவோம். சத்தியமோ சச்சிதானந்தின் ஒரு லீலையே, சச்சிதானந்தமோ பரப்பிரம்மத்தின், புருஷோத்தமனின் ஒரு லீலையே என்றும் நாம் உணர்வோம்.
ஸ்ரீ அரவிந்தர்