இதயத்தில் ஏகாக்கிரம் செய். அதற்குள் நுழை; உள்ளுக் குள்ளே ஆழ்ந்து எவ்வளவு தூரம் செல்லமுடியுமோ அவ்வளவு தூரம் செல். புறத்தே சிதறிக்கிடக்கும் உனது உணர்வின் சாடுகளையெல்லாம் ஒன்றுசேர்த்துச் சுருட்டி உள்ளத்தில் ஆழ்த்தி அமிழ்த்திவிடு.
உனது இதயத்தின் ஆழ்ந்த அமைதியிலே, ஒரு கனல் எரிகின்றது. அதுதான் உன்னிடமுள்ள கடவுள் – உனது உண்மையான ஜீவன். அதன் குரலைக் கேள்; அதன் ஆணையின்படி நட.
உள்ளத்தை ஒருமைப்படுத்துவதற்கு இதர ஆதார சக்கரங்களும் உண்டு. உதாரணமாக, சிரசுக்கு மேலும் புருவங்களுக்கு மத்தியிலும் ஏகாக்கிரம் செய்யலாம். ஒவ்வொன்றுக்கும் ஒரு சித்தியுண்டு. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பலனைத் தரும். ஆனால் எல்லாவற்றிற்கும் ஆதாரமாயுள்ள ஜீவன் இதயத்தில் தான் இருக்கிறது. இதயத்திலிருந்தே எல்லா தீவிரமான இயக்கங்களும், உருமாறுதலடையவேண்டுமென்னும் திடசித்த மும், அனுபூதி பெறுவதற்கான பலமும் உற்பத்தியாகின்றன.
-அன்னையுடன் உரையாடல் 1929-1931