மே 9, 1914
மிதமிஞ்சிய மந்த மனோ நிலையிலிருந்து விடுபட்டு வெளிவர என் நாட்குறிப்பை முறையாக மீண்டும் எழுதத் தொடங்கும் இன்றியமையாமையை உணரும் இவ்வேளையில் என் உடலில் பல ஆண்டுகளாகக் கண்டிராத ஒரு தோல்வி ஏற்பட்டது, மேலும் சென்ற சில நாட்களாக இந்த உடலின் சக்தி எல்லாம் என்னை விட்டகன்றன. நான் ஏதோ தவறு இழைத்துவிட்டேன் என்பதன் அறிகுறியே இது என்று கண்டேன்; என் ஆத்ம பலம் குன்றி விட்டது; நின் சர்வ வல்லமை வாய்ந்த ஒருமையை நான் காண வொட்டாது ஏதோவொன்று மறைத்தது; ஏதோ தீய சூசனை ஒன்று என்னுள் புகுந்து எனக்கு வேதனை தந்தது. எம்பெருமானே, என் இனிய நாதனே, நின்னோடு முற்றும் ஐக்கியப்பட நான் இன்னமும் பக்குவம் அடையவில்லை என்பதை உணர்ந்து பணிவுடன் நின்முன் தண்டனிடுகிறேன். நின் பணிக்காக அர்ப்பணிக்கப்படும் இக்கருவியில் ஏதோ ஒரு பகுதி இன்னமும் இருளுக்கு உட்பட்டு அறிந்து கொள்ளும் திறனற்றிருக்கிறது. நின் சக்திகளுக்கு இணங்கி வரவேண்டியபடி இணங்காமல் அவைகளின் வெளிப்பாட்டை மறைத்து கோணலாக்குகின்றது.
ஒரு பெரும் பிரச்சனை என் முன் எழுந்தது. ஆனால் அதற்கு விடை காண முடியாது எனது உடலின் சுகவீனம் அதைத் திரையிட்டு மறைத்தது. இப்போது மீண்டும் உன் ஐக்கியத்தை உணர்ந்து அனுபவிப்பதால் அப்பிரச்சினை இப்பொழுது பொருளற்றது போலக் காண்கிறது. இது எனக்குச் சரியாக விளங்கவில்லை.
நான் எனக்குப்பின்னே வெகுதொலைவில் எதையோ விட்டுவிட்டு முன்னேறுவது போலவும், நான் ஒரு புது வாழ்க்கைக்கு விழித்தெழுவது போலவும், தோன்றுகிறது. இந்த அனுபூதி ஒரு கனவாய் இராமலும், புன்னகைக்கும் ஆழ்ந்த சாந்தி திரும்பிவந்து என்றும் நிலைத்திருக்கவும் அருள்.
என் திவ்ய நாதனே, முன்னேயெல்லாம் விட என் பக்தி நின்பால் தீவிரமாய் ஆர்வமுறுகிறது. நின்பால் கனியும் உயிர்கொண்ட அன்பாக என் இருக்கை இப்புவியில் விளங்கட்டும்… இதையன்றி நான் வேறொன்றையும் வேண்டேன்! என் ஆணவமெல்லாம் என்னிடமுள்ள இருளெல்லாம் மறைந்திடுக! என் உணர்வு நின் உணர்வுடன் ஒன்றுக; இக்கருவியோ பலமற்றது. நிலையில்லாதது; ஆயினும் இதன் மூலம் நின் திருவுளம் ஒன்றே செயல்பட அருள்!
என் இனிய நாதனே, என் பக்தி நின்பால் ஆர்வமுறும் தீவிரத்தை என்னென்பது… உனது திவ்விய அன்பாகவே நான் ஆகிவிட அருள், ஒவ்வொரு ஜீவனிடத்தும் இந்த அன்பு ஆற்றல் வாய்ந்ததாக வெற்றிகரமாக விழித்தெழட்டும். நான் இப்புவி முழுவதையும் கவிந்து கொள்ளும் அகன்ற அன்புப் போர்வையாகி, எல்லா இதயங்களிலும் உட்புகுந்து, ஒவ்வொரு செவியிலும் நம்பிக்கை, சாந்தி ஆகிய நினது தெய்வீக செய்தியை ஓதட்டும்.
என் இறைவா, நின்பால் எனது ஆர்வம் தீவிரமாக எழுகின்றது; இருளும் பிழையுமாகிய இவ்விலங்குகளைத் தகர்த்தெறி இந்த அஞ்ஞானத்தை ஓட்டு, எனக்கு விடுதலை அளி, நான் நினது ஒளியைக்காண அருள்..
இந்த விலங்குகளை முறித்திடு.. நான் புரிந்து கொள்ளவும், நான் உண்மையான நான் ஆகிவிட விரும்புகிறேன், அதாவது இப்போதுள்ள ‘நான்’ நின் ‘நான்’ ஆகிவிட வேண்டும், உலகில் ஒரே ஒரு ‘நான்’ தான் இருக்க வேண்டும்.
எம்பெருமானே! எனது பிரார்த்தனையைக் கேட்டு அனுக்கிரகி; என் முறையீடு நின்பால் கனன்றெழுகின்றது.
ஸ்ரீ அன்னையின் பிரார்த்தனைகளும் தியானங்களும்