மார்ச் 18, 1914
பூரண ஞானம், சுத்த சேதனம் எல்லாம் நீயே. எவனொருவன் நின்னோடு ஐக்கியப் பட்டுள்ளானோ, அவன் அப்படி ஐக்கியப்பட்டிருக்கும் வரை சர்வக்ஞன், எல்லாம் அறிய வல்லோன், இந்த நிலையை அடையும் முன்பே, தன்னையும், தன் இச்சா சக்தியையும் பூரண நேர்மையுடன் அர்ப்பணித்துக் கொண்டவன், தன்னுள்ளும் தன் செல்வாக்குக்கு உட்பட்டவை களிலும் நின் அன்பின் தெய்வீக தர்மம் வெளிப்பட்டு வெற்றியுடன் செயலாற்ற முழு முயற்சி செய்பவன் ஆகிறான். அவன் எல்லாம் மாற்றமடைந்துள்ளதையும், நிகழ்ச்சிகள் எல்லாம் நின் தர்மத்திற்கு ஒத்து அவனுடைய அர்ப்பணத்திற்கு உதவும் வகையில் நடப்பதையும் காண்கிறான். தனக்கு நேர்வதெல்லாம் தன்னுடைய மிகச் சிறந்த நன்மையின் பொருட்டே என்பதை உணர்கிறான். அவன் மனதில் எங்காவது சிறிது அஞ்ஞான இருள் இருந்து தன்னுள் ஒளிந்திருக்கும் ஏதோ ஒரு அஞ்ஞான ஆசையின் காரணமாக அதை உணர முடியாது போனாலும், உடனடியாகவோ கொஞ்சம் பொறுத்தோ தன்னைத் தடுத்தாட் கொள்ளும் அருள்சக்தி ஒன்று தன்னை பாதுகாத்தும், தான் மலர்ச்சி பெற்று திரு-வுரு அடைவதற்காகவும் தான் பூரணமாக மாறி ஒரு நல்ல திவ்ய கருவியாக ஆவதற்கும் மிக உகந்த சூழ்நிலைகளை அவனுக்கு உண்டாக்கி தருவதையும் அவன் காண்கிறாள்.
நாம் இதை உணர்ந்து கொண்டு, இதில் நமக்கு நிச்சயம் ஏற்பட்டவுடன் நமக்கு எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் சம்பவங்கள் எவ்வாறு முடிவுறுமோ என்ற விசாரமும் இல்லாது போய்விடுகின்றன. நாம் மிகச்சிறந்தது என்று கருதுவதையே ஒவ்வொரு கணமும் நாம் செயல்பட்டு நிறைவேற்றுகிறோம். இதன் விளைவுகளும் மிகச் சிறந்தவையாகவே இருக்கும் என்பதும் நமக்கு நிச்சயமாகிறது.
எம்மனே, ஆனது பற்றியே எங்கள் உள்ளம் கவலை பளுவற்று லேசாயும் மனம் நிம்மதியாயும் இருக்கின்றன. அக்காரணம் பற்றியே முழு நம்பிக்கையுடன் நாங்கள் நின்னை நோக்கி:– “நின் திருவுளம் நிறைவேறுக; நின் திரு-உளம் ஒன்றில் தான் உண்மையான இனிய– இசைபாட்டைக் காணலாம்”, என்று அமைதியாக சொல்கிறோம்.
– ஸ்ரீ அன்னை