ஒருமுறை நீ யோகப் பாதையில் நுழைந்து விட்டால், நீ எல்லா அச்சங்களையும் ஒழித்துக் கட்டவேண்டும் – உன்னுடைய மனத்தின் அச்சம், உன்னுடைய பிராண அச்சம், உடலின் கண்ணறைகளிலே குடி கொண்டுள்ள
உன்னுடைய உடலின் அச்சங்கள்.
திருஉருமாற்றத்தை நாடும் மற்றும் இந்தப் பாதையைப் பின்பற்றுபவனான ஒருவன், முழுக்க முழுக்க அச்சமற்றவனாக ஆக வேண்டும், அல்லது அவனுடைய இயற்கையின் எந்தப் பகுதியிலும் எதனாலும் உணர்ச்சி வயப்படவோ நடுக்கமுறவோ கூடாது.
பொதுவாக கூறுமிடத்து, பெரும்பாலும் மனிதனுடைய முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பது அச்சமே.
எல்லாவிதமான அச்சங்களுள்ளும் மிகவும் சூட்சுமமானதும் மிக உறுதியாகப் பற்றிக் கொள்வதும் மரணத்தினுடையதுதான் .
ஒருவன் எதற்கு அச்சப்படுவதில்லையோ அதை மட்டுமே வெற்றிகொள்ள முடியும், மேலும் மரணத்திற்கு அஞ்சும் ஒருவன் முன்னதாகவே, மரணத்தால் வெல்லப்பட்டு விடுகிறான்.
முதலாக மற்றும் மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், வாழ்க்கை ஒன்றே மற்றும் அது நித்தியமானது என்பதே.
வடிவங்கள் தாம்,எண்ண முடியாத எண்ணிக்கை உடையவை, அவை நிலையற்றவை மற்றும் எளிதில் உடையக்கூடியவை.
அப்பொழுது உயிர் சாவதில்லை, ஆனால் வடிவங்கள் கரைக்கப் படுகின்றன, மேலும் இந்தக் கரைத்தலைத்தான் உடலுணர்வு அஞ்சுகிறது.
இருப்பினும் வடிவம் இடையறாது மாறுபடுகிறது, மேலும் இந்த மாற்றம், முன்னேற்றமாக இருப்பதிலிருந்து, அதைத் தடுத்து நிறுத்துவது ஏதும் இல்லை.
மரணத்தை விரும்பும் ஒருவன் அதை அடைய நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்,மேலும் அதை அஞ்சும் ஒருவன், எல்லா முன்னெச்சறிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்த போதிலும், திடீரென்று கடுமையாகத் தாக்கி வீழ்த்தப்படுவான்.
எல்லா உணர்ச்சிகளுக்கும் அப்பால்,
நம்முடைய ஜீவனின் அமைதியான ஆழங்களில், இடையறாது ஓர் ஒளி சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது.
அதுவே சைத்திய உணர்வின் ஒளி.
அந்த ஒளியைத் தேடிச்செல்,
அதன் மீது ஒருமுனைப்படு;
அது உன்னுடன் உள்ளது.
ஒரு விடாமுயற்சியின் உறுதியால் நீ அதை நிச்சயம் காண்பாய்.
நீ அதற்குள் புகுந்தமாத்திரத்திலேயே,
நீ இறவாமை உணர்வுக்கு எழுவாய்.
நீ எப்பொழுதும் வாழ்ந்திருப்பதாக உணர்வாய், நீ எப்பொழுதும் வாழ்வாய்.
ஶ்ரீ அன்னை.