“துக்கப்படுகிறவர்கள் எல்லோரும் சந்தோசப்படட்டும், கொடியவர்கள் எல்லோரும் நல்லவர்களாகட்டும், நோயாளிகள் எல்லோரும் உடல் நலன் பெறட்டும்”
நினது தெய்வீக அன்பு இந்தக் கருவியின் மூலமாக வெளிப்படுவது சம்பந்தமாக என்னுள் இவ்வாறு ஓர் ஆர்வம் உருப்பெற்றது, ஒரு குழந்தை தன் தந்தையிடம் தான் கேட்பது கிடைக்கும் என்ற நிச்சயத்துடன் ஒன்றைக் கேட்பது போலிருந்தது.
ஏனெனில், நான் கேட்டபோது அது கிடைக்கும் என்ற திட நம்பிக்கை என்னிடமிருந்தது; அது எனக்கு அவ்வளவு எளிதாகத் தோன்றியது; அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதை நான் மிகத் தெளிவாக என்னுள் உணர்ந்தேன்.
விருப்பமில்லாமல் அஞ்ஞானப் போராட்டத்தில் சிரமப்பட்டுக் கொண்டும் துன்பப்பட்டுக்கொண்டும் இருப்பதை விட மகிழ்ச்சியிலிருந்து அதிக மகிழ்ச்சிக்கும், அழகிலிருந்து அதிக அழகிற்கும் வளர்வது அதிக இயற்கையாகவும், அதிகப் பயனுள்ளதாகவும் இல்லையா?
நினது திவ்விய அன்பின் தீண்டுதலால் இதயம் சுதந்திரமாக மலர்வதற்கு நீ அனுமதித்தால், இந்தத் திவ்விய மாற்றம் எளிது, தானாகவே வந்து விடும்.
எம்பெருமானே, நினது கருணையினுடைய வாக்குத் தத்தமாக நீ இதை அருளாயோ?
ஒரு குழந்தையின் நம்பிக்கையுடன் இந்த மாலை வேளையில் என் இதயம் நின்னை இறைஞ்சுகின்றது.
ஸ்ரீ அன்னை