ஸ்ரீ அன்னைக்கும் ஸ்ரீ அரவிந்தருக்கும் இருந்த உறவு குரு சிஷ்ய உறவைவிட மேம்பட்டது . ஸ்ரீ அரவிந்தர் ஆசிரம விஷயங்களில் இருந்து முற்றிலும் ஒதுங்கியே இருந்தாலும் , அவருக்கு ஆசிரமத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் நன்கு தெரியும். அதுபோல ஸ்ரீ அரவிந்தரின் யோக சாதனைகளையும் , அதன்முன்னேற்ற முயற்சிகளையும் ஸ்ரீ அன்னை நன்கு அறிவார் .
ஸ்ரீ அரவிந்தர் எவ்வாறு தனது காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து சுற்றுப்புறச் சூழலையே மறந்திருப்பார் என்பதை சாதகர்களுக்கு கீழ்கண்ட ஒரு சம்பவம் மூலம் ஸ்ரீ அன்னை விளக்கினார் . ” ஒரு முறை மிக பலத்த மழையோடு பெரிய புயல் அடித்துக் கொண்டிருந்தது . நான் ஸ்ரீ அரவிந்தரின் அறைக்குச் சென்று ஜன்னல் கதவுகளைச் சாத்தி , அவருக்கு உதவி செய்யலாம் என நினைத்தேன் . அதனால் , அவர் அறையை நோக்கி சென்றேன் . லேசாக கதவை திறந்து உள்ளே சென்றபோது , அவர் தமது எழுதுமேசை அருகே உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தார் , வெளியில் பெரிய சூறாவளி அடித்துக்கொண்டிருந்தாலும் அவர் இருந்த அந்த அறையில் அவ்வளவு அமைதி நிலவியது . அறையில் உள எல்லா ஜன்னல்களும் திறந்தே இருந்தன . ஆனால் உள்ளே துளி நீர் கூட வரவில்லை . அதைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாது
ஸ்ரீ அரவிந்தர் தமது காரியத்திலேயே கருத்துடையவராக இருந்தார் . அந்த அளவிற்கு அவர் தமது செயலோடு ஒன்றியிருந்தார் .
நாம் செய்ய வேண்டியது பற்றி மனதுக்குள்ளே உண்மையானதொரு பிரக்ஞையைப் பெற்றிருத்தல் , சிறிதும் அச்சமின்றி தெய்வீக அமைதி நிரம்ப பெற்றிருத்தல் போன்றவையால் உண்மையிலேயே நமக்கு எந்த துன்பமும் வராது . அதற்கு உதாரணமாக இருந்தது
ஸ்ரீ அரவிந்தரின் செயல் , என்று விளக்கினார் .
ஸ்ரீ அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும்