*பிரார்த்தனைகளும் தியானங்களும்*
ஆகஸ்டு 20, 1914
இலட்சியத்தை புதிய கோணத்திலிருந்து பார்க்க வேண்டுமானால் — இது பிற நோக்குளையும் தெளிவுபட செய்யும் — நான் அக உலகக் கண்டுபிடிப்புகளை இடைவிடாமல் புதுப்பித்துக் கொண்டு, பிரயாணத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று ஒருபோதும் முன்கூட்டியே முடிவு செய்யாமல் உணர்வின் இறுதி எல்லை வரை செல்ல வேண்டும்.
ஆனால் மனம் சுபாவமாகவே இதற்குமுன் நமது உணர்வு இறுதி இலக்குடன் கொண்ட தொடர்பு அல்லது தொடர்புகளின் போது ஏற்பட்ட அனுபவப் பதிவுகளை நினைத்துப் பார்க்கிறது. பார்த்து, “பாதையின் முடிவில் இருப்பது இதுதான்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறது. அப்படி தன்னுடைய எண்ணத்தில் உள்ளது இலட்சியத்திற்குக் கொடுக்கக்கூடிய எண்ணற்ற சிந்தனை வடிவங்களில் அதுவும் ஒன்று — அது கேலிச்சித்திரமாகக் கூட இருக்கலாம் — என்பதை அது உணர்வதில்லை; சிந்தனை உரு கொடுப்பது அனுபவத்திற்குப் பிறகு வர வேண்டும். அதற்கு முன்பே அன்று என்பதையும் அது உணர்ந்து கொள்வதில்லை.
இதற்குமுன் அந்த வழியே சென்ற தில்லை போல் மனத்தில் ஒன்றையும் வைத்துக்கொள்ளாமல் பாதையைத் தொடர்வதுதான் உண்மையான தூய்மை, பூரணமான நேர்மை; அதுவே தடையே இல்லாத முன்னேற்றம், வளர்ச்சி, முழுமையான பூரணம் இவற்றைத் தரும் நேர்மை.
வாக்கு மனம் கடந்த பெம்மானே, என்னையும் மீறி, எல்லாச் சிந்தனைகளும் அடங்கிய நிலையில், அதாவது மனச் சூத்திரங்கள் எதையும் கற்பித்துக் கொள்ளாமல், என்னுள் ஏதோ ஒன்று, சொற்களுக்கு எட்டாத ஆழத்திலிருந்து வரும் ஒன்று, கனலேறும் ஆர்வத்துடன் நின்னை நோக்கித் திரும்புகிறது: அதன் செயல்களையெல்லாம், அதன் ஜீவக் கூறுகளையெல்லாம், ஜீவ பாணிகளை எல்லாம் நினக்கே அர்ப்பணித்து, இவையெல்லாம் நினது மகோன்னத ஒளியைப் பெற வேண்டும் என்று மன்றாடுகிறது.
நீ என் சிந்தனையால் பற்ற முடியாதவனாய் உள்ளாய் எனினும் நான் உன்னை நிச்சயமாக அறிந்துள்ளேன்.
– ஸ்ரீ அன்னை