*சூழ்நிலையும் நோய்த் தாக்குதலும்*
உடலுக்கு நோய் வரக்கூடிய வாய்ப்புகள் உன் உடலினுள்ளேயும் உன்னைச் சுற்றியும் எப்போதுமே இருக்கத்தான் செய்கின்றன. உன்னுள்ளும் உன்னைச் சுற்றியும் எல்லாவிதமான நோய்கிருமிகளும் திரள்திரளாய் இருக்கின்றன. அப்படியானால் பல வருடங்களாக உன்னைப் பிடிக்காத நோய்க்கு நீ திடீரென்று எப்படி ஆளாகிறாய்? “உயிர் சக்தி நலிந்து போய்விட்டதால்” என்று நீ சொல்வாய். ஆனால் அது ஏன் நலிந்து போனது? உன் ஜீவனில் ஏதோ இசைவின்மை இருப்பதால், அல்லது நீ தெய்வீக சக்திகளுக்குத் திறவாமல் இருப்பதால், உன்னைத் தாங்கி நிற்கும் ஒளி, சக்தி ஆகியவற்றிலிருந்து உன்னை நீயே துண்டித்துக்கொள்ளும்போது இந்த நலிவு ஏற்படுகிறது; “நோய்க்கு ஏற்ற சூழல்” என்று மருத்துவ விஞ்ஞானம் வர்ணிக்கும் நிலை ஏற்படுகிறது. சில சக்திகள் இந்த நிலையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. சந்தேகம், மனச்சோர்வு, தன்னம்பிக்கையின்மை, சுயநலத்தோடு தன்னையே கருத்தில் கொள்தல் இவையெல்லாம் தெய்வீக ஒளியிலிருந்தும் சக்தியிலிருந்தும் உன்னைத் துண்டிக்கின்றன. பகைச் சக்திகளின் தாக்குதலுக்குச் சாதகமாய் இருக்கின்றன. நீ நோய்வாய்ப்படுவதற்குக் காரணம் இதுதான், கிருமிகள் அல்ல.
~ ஸ்ரீ அன்னை