இறுதியாக நீயே ஈசுவரனாக இருப்பதை உணர்ந்து கொள் ;ஆனால் இதற்கென்று ஒரு வடிவத்தை அமைக்காதே இதற்கென ஒரு தனிப்பட்ட பண்பைத் தேடாதே. உனக்குள்ளே அவனுடன் ஒன்றி விடு. உனது உணர்வில் அவனுடன் தொடர்பு கொள். உனது ஆற்றலில் அந்த ஈசுவரனுக்கு அடி பணிந்திரு.. அந்த ஒருவனுக்கே ஆளாகு. உனது ஆனந்தக் களிப்பில் அவனோடு கட்டுண்டிரு.உனது பிராணனில் , உடலில் ,மனதில் எல்லாம் அந்தப் பரமனே நிறைந்திருக்குமாறு செய். இவ்வாறு உனது கண் திறந்ததுமே ,அந்தச் சத்திய புருஷன், ஒன்றேயாகிய பரம்பொருள் உன்முன் தோன்றுவான், நீயாகவும் நீயல்லாமலும் இருப்பவன், உனது வேலைகளை இயக்குவோனும் அவற்றை நுகர்வோனும் ,அந்த வேலைகளின் ஈசனாகவும் கருவியின் ஈசனாகவும் இருப்பவன், இந்த பிரபஞ்ச தாண்டவத்தில் ஆடிக் களிப்பவனாகவும் இந்தப் பிரபஞ்சத்தை துவைத்து மிதிப்பவனாகவும இருக்கும் அவனே உனது உள்ளறையில் அந்தரங்கமாய் உன்னோடு மோனத்தில் கூடியிருக்கவும் வல்லவன்.
இந்த பிரம்மானந்தத்தைக் கைபற்றிய பின் உனக்கு வெல்ல வேண்டியது எதுவும் இல்லை. அப்போது அவன் தன்னையே உனக்களிப்பான். அனைத்துயிர்களும் அடையும் நுகர்ச்சிகளையெல்லாம் உனக்கேயான பங்காய்க் கொடுப்பான் .
பங்கிட இயலாத செறிந்த வஸ்துவையும் அவன் உனக்கு அளிப்பான்.
நீ உனக்குள்ளே உன்னையும் மற்றவர்களையும் உள்ளடக்கியிருப்பாய். நீயல்லாததையும் மற்றவரல்லாததையும் கூட உன்னுள் கொண்டிருப்பாய். வேலைகளின் , கர்மத்தின் உன்னத முடிவும் சிகரமும் இதுதான்.
– ஸ்ரீ அரவிந்தர்