*தியானத்தில் நேரும் சாதாரண இன்னல்கள்*
நமது மனம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதன் இயக்கத்தை நாம் முழுவதுமாக கவனிப்பதில்லை. நம்மையறியாமல் அதனுடைய இடையறாத எண்ணச் சூழலில் சிக்கி நாம் அடித்துச் செல்லப்படுகின்றோம். தியானத்தில் ஒரு முனைப் பட ஆரம்பிக்கும் போதுதான் நாம் இந்தத் தானியங்கியானா எண்ணச் சூழலைக் கவனிக்கத் தொடங்குகிறோம். இதுதான் சாதாரணமாக ஏற்படும் முதல் இடையூறு. இரண்டாவது தூக்கம். இவை இரண்டும் யோக சாதனைக்கு இடைஞ்சலாக அமைந்துவிடுகின்றன.
தியானத்தின்போது எண்ணங்கள் வந்து தொல்லை தருவது அசுர சக்தியின் வேலை அல்ல. அது சாதாரண மனித மனதின் இயல்பு தான். இந்தத் தொல்லை எல்லா சாதகர்களுக்குமே உண்டு. சிலருக்கு இது நீண்ட நாள் நீடிக்கும். இதிலிருந்து மீள்வதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று எண்ணங்களை ஊன்றிக் கவனிப்பது; மானிட மனதின் போக்கு எத்தகையது என்பதை ஊன்றிப் பார்த்து எண்ணங்களுக்கு ஒப்புதல் தராமல் இருப்பது; அவைகள் தாமாகவே ஓய்ந்து போகும் வரை நிலையாக நின்று கவனிப்பது —
— இது விவேகானந்தர் தமது ராஜ யோகத்தில் கூறும் ஆலோசனையாகும். மற்றொரு வழி,எண்ணங்களைத் தனதாகக் கருதாமலிருத்தல், அவற்றின் பின்னால் நின்று சாட்சி புருஷனாக இருந்து பார்த்து அவற்றுக்கு அனுமதி அளிக்காமல் இருத்தல்;
எண்ணங்கள் வெளியே இருந்து வருகின்றவை என்று அறியவேண்டும். அவை பிரகிருதியிலிருந்து — அதாவது இயற்கையிலிருந்து வருகின்றன. மன வெளியைக் கடந்து செல்லும் வழிப்போக்கர்களாக அவைகளை கருதவேண்டும். அவற்றிற்கும் சாதகனுக்கும் எவ்வித தொடர்பும் இருக்கலாகாது. அவற்றில் எவ்வித ஈடுபாடும் கொள்ளலாகாது. இவ்வாறு பயிற்சி செய்யும்போது சிறிது நாட்களில் மனம் இரண்டு பகுதிகளாக பிரிவதைக் காணமுடியும். எண்ணங்களோடு ஒட்டாமல் சாட்சியாக நின்று கவனிக்கும் பகுதி ஒன்று. மற்றது கண்காணிப்பிற்கு உள்ளாகும் பகுதியான பிரகிருதி — எண்ணங்கள் வந்து போகும் பகுதி. பின்னர் இந்த பிரகிருதியின் இயக்கத்தையும் ஓயச் செய்வது சாத்தியமாகிவிடும். மூன்றாவது வழியொன்று இருக்கிறது. இது நல்ல பலன் தருவது; அதாவது எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை கண்டறிய வேண்டும் தன்னுள்ளிருந்து அவை தோன்றவில்லை என்றும் தலைக்கு வெளியே இருந்து அவை வருகின்றன என்பதையும் காணவேண்டும்; அவைகள் வரும்முன் கண்டுபிடித்து சட்டென்று அவற்றைப் பிடித்து தள்ளிவிட வேண்டும். இந்த முறை மிகவும் கடினமானது தான். எல்லோராலும் செய்ய முடியாததுதான். இருந்தாலும் இதைச் செய்ய முடிந்தால் அமைதியை அடைய இதைவிடச் சுருக்கு வழியும் சக்திவாய்ந்த மார்க்கமும் வேறு இல்லை.
– ஸ்ரீ அரவிந்தர்