நாம் அன்னையாக வணங்கும் அவள் அனைத்தையும் ஆளும் சித்சக்தி ஆவாள். அவள் ஒருத்தியே ஆயினும் பன்முகப்பட்டவள். மிக வேகமான மனதாலும், மிகச் சுதந்திரமான, மிக விரிவான அறிவாலும் அவள் இயக்கங்களைப் பின்பற்ற முடியாது.
*அன்னை பரமனின் உணர்வும் சக்தியுமாவாள். அவள் தனது படைப்புகளுக்கெல்லாம் மேலே மிக மிக உயரத்தில் இருக்கிறாள்.*
ஆயினும் அவளது சக்தி வடிவங்கள் மூலம் நாம் அவளது வழிகளைச் சிறிது காணவும் உணரவும் முடியும். ஏனெனில் அவள் அப்பொழுது அளவிற்குட்பட்ட குணமும் செயலும் கொண்ட, ஆகவே நம்மால் அறியக்கூடிய தேவதை வடிவங்களில் தன்னைத் தனது படைப்பினங்களுக்குக் காட்டவும் திருவுளம் கொள்கிறாள்.
தெய்வ அன்னைக்கு மூன்று நிலைகளுண்டு. நம்மையும் இப்பிரபஞ்சத்தையும் தாங்கி நிற்கும் சித்சக்தியுடன் ஒன்றும்போது அவற்றை நாம் உணரமுடியும்.
உலகாதீத நிலையில், ஆதி பராசக்தியை அவள் உலகங்களுக்கு மேலே நின்று, பரமனின் வெளிப்படாத என்றுமுள இரகசியத்துடன் படைப்பை இணைக்கிறாள்.
உலகளாவிய நிலையில் விஸ்வேஸ்வரியாய் உலகுயிர்களை எல்லாம் படைத்து, உலகின் அனந்த சக்திகளையும், இயக்கங்களையும் தன்னுள் கொண்டு, தான் அவற்றுள் உறைந்து அவற்றைத் தாங்கி நடத்துகிறாள்.
ஜீவேஸ்வரியாய், மேற்சொன்ன இரு பெரு நிலைகளின் சக்திகளையும் தன்னுள் கொண்டு, அவற்றை நாம் அறியும்படி நம் அருகில் கொணர்ந்து, மனிதத் தன்மைக்கும் தெய்வ இயற்கைக்கும் இடையில் பாலம் அமைக்கிறாள்.
– ஸ்ரீ அரவிந்தர்