*தியான முறைகள்*
ஓர் எண்ணத்திலோ, தான் பார்த்த ஒரு திவ்ய காட்சியிலோ அல்லது தான் அறிந்த ஒரு தத்துவத்திலோ மனதை முழுவதுமாகக் குவித்திருப்பதுதான் தியானம்.
விவேகானந்தர் ஒரு தியான முறையைக் கூறுகிறார். அதாவது நமது எண்ணங்களிலிருந்து விலகி நிற்க வேண்டும். எல்லா எண்ணங்களும் தத்தம் போக்கில் வந்து போகட்டும்; நாம் சும்மா இருந்து அவைகளைக் கண்காணிக்க வேண்டும். அவைகள் எப்படி இருக்கின்றன என்பதை கவனிக்க வேண்டும். இதை சுய கண்காணிப்பு என்று சொல்லலாம்.
இவ்வாறு தன்னைக் கண்காணித்துக் கொண்டே இருந்தால், எண்ணங்கள் வெளியில் இருந்து வருவதை தெரிந்து கொண்டால் ஒருநாள் எண்ணங்களெல்லாம் ஒழிந்து மனம் காலியாகும் நிலை வரும். மனது இப்படித் தெளிந்தவுடன் விழிப்புற்றதொரு தூய வெறுமை நிலவும்; அப்பொழுது தெய்வீக அறிவு தோன்றி மனதில் அழுத்தமான பதிவை உண்டாக்கும். சாதாரண மானிட மனதின் அற்ப எண்ணங்களெல்லாம் மறைந்து ஒரு கரும்பலகையில் சாக்கட்டியினால் எழுதியது போன்ற தெளிவுடன் திவ்விய அறிவு அங்கே தன்னைப் பொறிக்க ஆரம்பிக்கும்.
இப்படி மனோ விருத்திகளை மன இயக்கத்தைப் புறக்கணிப்பதை யோகத்தின் ஒரு வழிமுறையாக கீதை கூறுகிறது. இம்முறையை கீதை வெகுவாக ஆதரிக்கிறது. இந்த முறையில் மனத்திற்கு எண்ணங்களின் இயந்திரகதியிலிருந்து விடுதலை கிடைக்கிறது. இப்போது மனம் எப்போதும் தன் வசத்தில் இருக்கும். வேண்டும்போது வேண்டியவைகளை எண்ணவும் எண்ணாமல் இருக்கவும் அதனால் முடியும். இந்த தூய சத்திய அறிவைத்தான் நமது வேதாந்தம் விஞ்ஞானம் என்று கூறுகிறது.
ஸ்ரீ அரவிந்தர்