அருளிடும் இறைவனை மனிதன் அருகினில் ஈர்த்திடும் வேளையில் இயற்கை முறையுடன் இசைந்தடங் காதவோர் இருட்டு வரம்பிலா விதத்தே அவன்மேல் வீழு கின்றது. இயற்கைச் சத்தியின் எல்லா ஆற்றலும் அந்த வேளையில் அயர்ந்து தளர்வுறும், அவனைத் தடுத்தாண்(டு) அமைந்துள மடமைப் பேய்ப்பிடி தன்னைப் பெரிதும் முயன்று விலக்கி யவன்தன் வெறுமை யான தொடக்கத் தேவையின் மேலே சுண்டி வீசப் பெறுவான், மீண்டும் எழவே, நீண்ட நேரம் ஆன பிறகேனும், அவனிடம் அமைந்த மேற்பரப்(பு) ஆன்மா அதனைத் தள்ளி அகற்றுவ தோடு, மூடிய திரைகளை முற்றும் விலக்கி உள்ளே துலங்கும் உளதாம் தன்மையில் நின்று நிலையாய் இருத்தல் வேண்டும். சாவித்ரி தனக்கும் அவ்வகைப் பொழுதே இந்த வேளையில் வந்துசேர்த் திருந்ததே
பிறவி ஒருபயன் பெறாது வீணுறும் நெருக்கடி மிக்கதோர் நிலையுற்(று) இருந்தாள் இன்றேல், இதுவரை உதிக்கா(து) இருக்கும் அருங்கூ(று) அவளுளே விழித்தெழ வேண்டும். அன்றியும், அவளது மனத்தில் திட்பம் புற்கலத்(து) ஊழினைப் புறந்தளல் வேண்டும்.
– ஸ்ரீ அரவிந்தர்