உணர்வு நிலை மாற்றம் என்பது தேவையான ஒன்று. இது இல்லாமல் பௌதீக சித்திகளை அடைய முடியாது. ஆனால் உடல் அறியாமையின் விளைவுகளான மரணம், நோய், சிதைவு, வலி, உணர்வு நிலையின்மை ஆகியவற்றிற்கு அடிமையாகி இப்போதுள்ள நிலையிலேயே தொடருமானால் அதிமனமாதலின் முழுமை சாத்தியமல்ல. இவை தொடர வேண்டுமென்றால் அதிமனம் இறங்கி வருவது அத்தியாவசியமானதல்ல. மனதையும், ஆன்மாவையும் இறைவனுடன் இணையச் செய்ய மன உணர்வு நிலையின் அதிகபட்சமான நிலையே போதும்; மேல் மனமே கூடப் போதும். மெய்மையின் ஆற்றல் மிக்க செயல்பாடு மனதிலும், உணர்வுகளிலும், உடலிலும் நிகழ அதிமனம் கீழே இறங்கிவருவது அவசியமாகும். இது சுட்டிக்காட்டுவது என்ன வென்றால் இறுதி விளைவு என்பது உடலின் உணர்வு நிலையின்மை நீங்கிவிடும் என்பதும், உடல் இனிமேலும் நோய்களுக்கும் சிதைவுக்கும் ஆளாக வேண்டியதில்லை என்பதும் தான். மரணம் சம்பவிக்கும் சாதாரண நிகழ் முறைகளுக்கு உடல் ஆட்பட வேண்டியதில்லை என்பது இதன் பொருள். உடல் மாறுதலுக்குள்ளாக வேண்டுமென்றால் அதன் உரிமையாளரின் சம்மதத்தோடு தான் அது நிகழ முடியும். இதுதான் (3000 வருடங்கள் வாழ வேண்டிய நிர்பந்தம் இல்லை. காரணம் இதுவே ஒரு தளையாகிவிடும்) பௌதீகரீதியான அமரத்துவம். இருப்பினும் ஒருவர் 1000 வருடங்களுக்கும் மேலாக வாழ வேண்டுமென்று நினைத்தால் அவர் முழுமையான சித்தியடைந்தவரென்றால் இது அசாத்தியமானதல்ல.
– ஸ்ரீ அரவிந்தர்